சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, கோல்கட்டாவில் நடத்த வேண்டும் என, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) வேண்டுகோள் விடுத்தது.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார்.
சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றி வரும் சச்சின், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது.
இதன்படி, நவ., மாதம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, சச்சினின் சொந்த ஊரான மும்பையில் நடக்கும் எனத் தெரிகிறது.
முதல் டெஸ்ட்டை மும்பையில் நடத்திவிட்டு, 2வது போட்டியை கோல்கட்டாவில் நடத்த வேண்டும் என, சி.ஏ.பி., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.பி., காசாளர் பிஷ்வரப் தே கூறியது:
இந்திய மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியை, மும்பை ஏற்று நடத்த விரும்புகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். இதை கோல்கட்டாவில் நடத்தினால் நன்றாக இருக்கும்.
இதற்கு ஈடன் கார்டன் மைதானம் தான் சரியான இடம். இந்திய மைதானங்களில் இங்கு தான் அதிகமான இருக்கைகள் (67 ஆயிரம்) உள்ளன மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க மைதானம் இது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். போர்டு என்ன முடிவெடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு பிஷ்வரப் தே கூறினார்.





