இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பைனல் வரை முன்னேறிய இந்திய ஹாக்கி அணிக்கு, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.டி. சிங் பாராட்டு தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், ஆண்களுக்கான 9வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில், கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றிது. லீக் மற்றும் அரையிறுதியில் 100 சதவீத வெற்றியுடன் பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் தோல்வியை சந்தித்தது. இதனால், அடுத்த ஆண்டு நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. தற்போது இந்திய அணி, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஓசியானா கோப்பை தொடரை எதிர்நோக்கி உள்ளது. இதில், ஏற்கனவே உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணிகள் கோப்பை வெல்லும் பட்சத்தில், இந்திய அணியின் இடம் உறுதியாகிவிடும்.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பு (ஐ.எச்.எப்.,) தலைவர் கே.டி. சிங் கூறுகையில், ""ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்தது. பைனலில் கண்ட தோல்வி குறித்து கவலைப்பட தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இத்தொடரில் இந்திய வீரர்கள் எதிர்பார்த்ததைவிட அருமையாக விளையாடினர். மீண்டும் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு புத்துயிர் பெறும்,'' என்றார்