நரைன் கார்த்திகேயன் சாம்பியன்

இங்கிலாந்தில் நடந்த "ஆட்டோ கிராண்ட்பிரிக்ஸ்' கார்பந்தயத்தில், இந்திய வீரர் நரைன் கார்த்திகேயன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இங்கிலாந்தில் உள்ள டோனிங்டன் நகரில், நடப்பு ஆண்டின் 7வது சுற்றுக்கான "ஆட்டோ கிராண்ட்பிரிக்ஸ்' கார்பந்தயம் நடந்தது. மொத்தம் இரண்டு சுற்றுகள் கொண்ட இப்பந்தயத்தின் முதல் சுற்றில், "சூப்பர் நோவா இன்டர்நேஷனல்' அணிக்காக பங்கேற்ற இந்திய வீரர் நரைன் கார்த்திகேயன், இரண்டாவது இடம் பிடித்தார். இதன் இரண்டாவது சுற்றில், பந்தய தூரத்தை 28 நிமிடம், 00.985 வினாடியில் கடந்த இந்தியாவின் நரைன் கார்த்திகேயன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற நான்காவது சாம்பியன் பட்டம். முன்னதாக இவர், ஜெர்மனியின் நுர்பர்கிரிங், இத்தாலியின் முஜல்லோ, இங்கிலாந்தில் சில்வர்ஸ்டோன் நகரில் நடந்த பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சிறந்த டிரைவருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில் 170 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார்.