டில்லி அணி பயிற்சியாளர் கிறிஸ்டன்

டில்லி அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், 45. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இவரது பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி, "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. 2011ல் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பை வென்றது. 

இதன் பின் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக சென்று, அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார். கடந்த ஆக., மாதத்துடன் பதவி விலகிய இவர், இப்போது டில்லி பிரிமியர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 
தற்போதுள்ள எரிக் சைமன்ஸ் உதவி பயிற்சியாளராக செயல்படவுள்ளார். கடந்த ஆறாவது தொடரில், 8வது இடம் பெற்ற டில்லி அணி, கிறிஸ்டன் பயிற்சியில் கோப்பை வெல்லும் என நம்பப்படுகிறது. 
கிறிஸ்டன் கூறியது: 
இது சவாலான பணி தான். என்னை ஒப்பந்தம் செய்ய எரிக் சைமன்ஸ் தான் பரிந்துரை செய்தார். என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன். எனவே தான், ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டும் பணி புரியும் பிரிமியர் தொடருக்கு முன்னுரிமை அளித்தேன். இதில் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.
பிரிமியர் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இதற்கேற்ப அணியை தயார் செய்ய வேண்டும். இதற்கு தகுந்து, இந்தியாவில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில், சில வீரர்களை அணியில் இடம்பெற செய்வேன். 
இவ்வாறு கிறிஸ்டன் கூறினார்.
கோஹ்லிக்கு பாராட்டு
விராத் கோஹ்லி குறித்து கிறிஸ்டன் கூறுகையில்,"" இவர் அபூர்வமான திறமை படைத்தவர். பெரிய வீரராக வருவார் என துவக்கத்திலேயே நம்பினேன். சில ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளார். இவர், சச்சின் இடத்தை நிரப்புவார் என கூற முடியாது. சச்சின் இடத்துக்கு ஒருவரை பரிந்துரை செய்வது "ரிஸ்க்கான' செயல்,'' என்றார். 
சபாஷ் பிளட்சர்
இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர் குறித்து கூறுகையில்,"" இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகம் உள்ளதால், இவர்களுக்கு பயிற்சி தருவது கடினம். இதையும் மீறி, பிளட்சர் சிறப்பாக செயல்படுகிறார். சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க "ஏ' அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் சிலரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம், "சீனியர்' வீரர்களுடன் கடந்த கால நினைவுகளை புதுப்பித்துக் கொண்டேன்,'' என்றார்