அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இரண்டாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில், பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டி மற்றும் அம்பயர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
இந்தியாவில், முதலாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதன் பைனலில், ஐதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி 3-1 என அவாத் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இம்முறை, இரண்டு ஆண்கள் ஒற்றையர், தலா ஒரு பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்கள் இரட்டையர் பிரிவு இடம் பெறவில்லை. இத்தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா உள்ளிட்ட நிறைய வீராங்கனைகள், இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக இருந்தனர்.
இதனால் அடுத்து வரும் தொடர்களில் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகளை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகள் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பாட்மின்டன் சங்க (பி.ஏ.ஐ.,) தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறுகையில், ""ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சம அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பெரிய தொடர்களில் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே, இந்தியன் பாட்மின்டன் லீக் தொடரை மேலும் பிரபலப்படுத்த, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டி நடத்த முயற்சி செய்யப்படும். இதேபோல, போட்டியின் போது அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமல்படுத்த ஆலோசிக்கப்படும். அதிகளவு ரசிகர்களை கொண்டு வருவதற்காக, போட்டி நேரத்தில் மாற்றம் செய்யப்படும்,'' என்றார்.