போட்டிக்கு போட்டி ஆய்வு...அப்புறம் தான் ஓய்வு: மனக்குழப்பத்தில் சச்சின்

இந்தியாவின்ல் 200வது டெஸ்டில் சச்சின் பங்கேற்றாலும், தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்த இவர், 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் இவர், கடைசியாக 2011, ஜன., 4ல் தென் ஆப்ரிக்கா தொடரில் சதம் அடித்தார். இதன் பின் களமிறங்கிய 38 இன்னிங்சில் (21 டெஸ்ட்) ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 
சொந்த மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்டில் இதுவரை சதம் அடிக்கவில்லை. இதனிடையே, இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. 
பி.சி.சி.ஐ., விதிப்படி இந்த போட்டிகள் பெங்களூரு, ஆமதாபாத்தில் நடக்க வேண்டும். இதை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் படி, சொந்த ஊரான மும்பையில், 200வது டெஸ்டில் பங்கேற்று, சச்சின் ஓய்வு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், சச்சினுடன் பேசியுள்ளனர். ஆனால், இவர் எதிர்வரும் தென் ஆப்ரிக்க தொடர், அடுத்து 2014ல் நியூசிலாந்து தொடரிலும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. 
2014, நவம்பரில் இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை, முன்னதாக இந்த ஆண்டு அழைத்துள்ளனர். இதற்குப்பதில் அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணியை இந்தியாவுக்கு அழைக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. 
இவை நடக்கும் பட்சத்தில், மும்பை மண்ணில் 200 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றாலும், சச்சின் ஓய்வு பெறமாட்டார். ஏனெனில், சில மாதங்களாக சச்சின் தனது நண்பர்களிடம்,"தென் ஆப்ரிக்க தொடர் கடினமானது,' என்று தெரிவித்து வருகிறார். 
ஓய்வு கிடையாது: சச்சினின் குழந்தை பருவ நண்பர் ஒருவர் கூறுகையில்,"" கடந்த முறை தென் ஆப்ரிக்காவில் சச்சின் 2 சதம் அடித்தார். இப்போது மீண்டும் தயாராகி வருகிறார். இந்நிலையில் இது போன்ற செய்திகள் எங்கிருந்து தான் வருகின்றனவோ. சச்சினை பொறுத்தவரையில் 200வது டெஸ்டை, சொந்த மண்ணில் விளையாடவுள்ளார், அவ்வளவு தான்,'' என்றார்.
ஓய்வு முடிவு குறித்து ஒரு "டிவி' சானலுக்கு அளித்த பதிலில் சச்சின்,"" பி.சி.சி.ஐ., முடிவு குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க இயலாது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிக்கு ஒருமுறையும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறேன்,'' என்றார்.